1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (15:40 IST)

திமுக வந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவு? – எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதலாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களால் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது, கரூரில் வேன் மோதி போக்குவரத்து காவலர் மரணம் போன்ற தொடர் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தாம்பரம் பிரதான சாலையில் காவலர்கள் நடத்திய சோதனையில் ஆயுதங்களுடன் இளைஞர்கள் பிடிபட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக-வினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல், போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன,அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும் “ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு. காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை அரசு நிலைநாட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.