1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (13:07 IST)

பூஸ்டர் டோஸ் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன??

பூஸ்டர் டோஸ் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பதில். 
 
உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது மூன்றாம் அலை பரவும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் பலவற்றில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை தொடர்ந்து பூஸ்டராக மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஆனால் உலக சுகாதார அமைப்பு, பல நாடுகளில் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியே கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் மற்ற நாடுகள் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிகள் எடுப்பது சரியானதல்ல என பூஸ்டர் தடுப்பூசி மீது ஆர்வம் காட்டாமல் உள்ளது. 
 
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து எடப்பாடிபழனிசாமியும், விஜயபாஸ்கரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போடு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் அதன் திறன் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் என்பதால் பூஸ்டர் டோஸ் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பட்டது. 
 
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் பூஸ்டர் டோஸ் தொடர்பான பூர்வாங்க பணிகள் தொடங்கவில்லை. மேலும் உலக சுகாதார நிறுவனம் இன்னும் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கவில்லை. இவ்விரண்டும் நடந்தால் பூஸ்டர் டோஸ் வழங்கும் பணிகளை தமிழக அரசு செயல்படுத்தும் என தெரிவித்தார்.