ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:53 IST)

உயிரிழப்பை வேடிக்கை பார்க்காமல் உண்மையை சொல்லுங்கள்! – திமுகவுக்கு எடப்பாடியார் கோரிக்கை!

நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க உண்மை நிலையை எடுத்து சொல்ல வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடந்து முடிந்தது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு முதல்நாள் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ” நீட்தோல்வி பயத்தால் மாணவி அரியலூர் கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரின் பெற்றோருக்கும் , குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன், திமுக தனது அரசியல் நாடகத்தையும் , நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும். மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.