அதிமுக அலுவலகத்தை திறக்க வேண்டும்..! – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு!
வன்முறை சம்பவங்களால் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை திறக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அங்கு நடந்த கலவரங்கள் தொடர்பாக இருதரப்பிலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கட்சி அலுவலகம் வருவதற்குள் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள அவர், அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை வைத்த சீலை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.