திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:46 IST)

சென்னை வெள்ளம்; 8 மாசமா என்ன செஞ்சீங்க..? – எடப்பாடியார் ஆவேசம்!

சென்னையில் நேற்று பெய்த திடீர் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முதலாக பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் நீர் தேங்கியதால் சுரங்க பாதைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் இறந்து உட்பட 3 பேர் மழையால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மழை வெள்ள நடவடிக்கை சரியாக மேற்கொள்ளப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “ஒருநாள் மழைக்கு சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. 8 மாதங்களாக என்ன சாதித்தது அரசு? மழைநீரால் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச்சொன்னவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய சொல்வாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தங்கள் இயலாமையை எதிர்கட்சிகள் மீது காட்டாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.