அனிதா மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!!
மத்திய அரசின் நீட் தேர்வு திட்டத்தால் தமிழகத்தை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை மத்திய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத வைப்பது எந்த வகையில் ஜனநாயகம். இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் ஒட்டுமொத்த மாணவ சமுதாயங்களும் இதனை எதிர்த்தது. அனைத்து கட்சிகளும் இதனை எதிர்த்தது.
ஆனால் இது எதையுமே அரசு கண்டுகொள்ளவில்லை. தன்னுடைய மருத்துவ கனவுக்கு முடிவுரை எழுதிய மத்திய மாநில அரசுகளின் துரோகத்தால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய ஏழை மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துள்ளார்.
இந்நிலையில், அனிதாவின் மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதோடு, அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.