திங்கள், 17 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 மார்ச் 2025 (09:36 IST)

மகனுக்கு சீட் கேட்ட செங்கோட்டையன்.. மறுத்த எடப்பாடி?? - மோதலுக்கு இதுதான் காரணமா?

அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே உரசல் தொடர்ந்து வரும் நிலையில் அதற்கு என்ன காரணம் என அரசியல் வட்டாரத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது.

 

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் கே.ஏ.செங்கோட்டையன். அதுமட்டுமல்லாமல் அதிமுகவிற்கு கோபிசெட்டிப்பாளையத்தின் அடையாள முகமாக திகழ்ந்து வருகிறார் செங்கோட்டையன். இந்நிலையில் சமீபமாக கட்சி மேலிடத்துடன் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கு செல்லாத அவர், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. மேலும் சட்டமன்றத்தில் சபாநாயகரை அவர் தனியாக சந்தித்து பேசியதும் அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியுடனான செங்கோட்டையனின் இந்த முரண்பாடுக்கு என்ன காரணம் என சில தகவல்கள் கசிகின்றன. 

 

நாடாளுமன்ற மாநிலங்களைவியில் செங்கோட்டையன் தனது அகன் கதிரீஸ்வரனுக்கு சீட் கேட்டதாகவும், அதை எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் கோபியில் செங்கோட்டையன் ஆதரவாளர்களே அதிமுக நிர்வாகிகளாக இருந்து வந்த நிலையில், அவரிடம் கலந்து பேசாமலே அங்கு புதியவர்களை நிர்வாகிகளாக எடப்பாடி பழனிசாமி நியமித்ததும் செங்கோட்டையனை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம்.
 

 

இதுதவிர மதுரை அரிட்டாப்பட்டி சுரங்க விவகாரத்தில் அதிமுக போராட்டம் நடத்தியது போல, கீழ்பவானி பாசன நிலத்தில் தனியார் சாய ஆலை தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதித்ததை எதிர்த்து அதிமுக கண்டன அறிக்கை, ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என செங்கோட்டையன் மனு அளித்ததாகவும், ஆனால் அதை மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

தொடர்ந்து தனது செல்வாக்கை குறைக்கும் வண்ணம் தலைமை செயல்பட்டு வருவதால் செங்கோட்டையன் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. எனினும் அவர் அதிமுகவின் உண்மை விசுவாசி, அதிமுகவை விட்டு அவர் வெளியேற மாட்டார் என அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிமுக முக்கிய புள்ளிகள் சமரச பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K