தொடர் போராட்டங்களால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைப்பு
உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் மக்களின் தொடர் போராட்டங்களால் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. சரியான முன்னறிவிப்பின்றி, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்களால், பேருந்து கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாதாரண பேருந்துகளில் 10 கி.மீட்டர் வரை ஒரு கி.மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசா குறைக்கப்படும். விரைவு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக குறைக்கப்படும். சொகுசு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 90 பைசாவில் இருந்து 80 பைசா வரை குறைக்கப்படும்.
அதிநவீன சொகுசு பேருந்துகளில் கி.மீட்டருக்கு 110 பைசாவில் இருந்து 100 பைசாவாக குறைக்கப்படும். குளிர்சாதன பேருந்துகளில் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாக குறைக்கப்படும். சென்னை மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.23ல் இருந்து ரூ.22 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.