திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , புதன், 3 ஜூலை 2024 (10:25 IST)

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நள்ளிரவில்மர்ம நபர்!

மதுரை மாவட்டம், நாகமலைப்புதுக்கோட்டை  பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. 
 
பல்கலைக்கழக வளாகத்தில், விருந்தினர் மாளிகை மற்றும் துணை வேந்தர் மாளிகை அருகே மாணவிகள் தங்குவதற்கான தங்கும் விடுதி உள்ளது.
 
மாணவிகள் தங்கும் விடுகியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான  மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று இரவு,பல்கலைகழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்துள்ளார்.
 
இதனைப் பார்த்த, மாணவிகள் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் மாணவிகள் அவரை துரத்தி பிடித்துள்ளனர்.
 
மாணவிகளிடம் சிக்கிய நபர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மது போதையில் இருந்த அந்த நபர் தான் தெரியாமல் வந்துவிட்டதாகவும், ஏற்கனவே   இதுபோல வந்துள்ளேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இதே பெண்கள் விடுதியில்,சில நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் வந்து செல்வதாக மாணவிகள் கூறிய பொழுது  வெறும் பிரம்மை என கூறி, பல்கலை கழக  நிர்வாகம் அலட்சியப்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில், தற்போது மர்ம நபரை மாணவிகளே பிடித்து அவசர எண் 100 மூலம் அழைத்து  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக, சம்பவ இடத்திற்குவந்த நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார்  மர்ம நபரை அழைத்து சென்ற நிலையில்  சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்காததால்,  முறையான விசாரணை மேற்கொள்ளாமல் காவல் நிலையத்திலிருந்து அந்த நபரை விடுவித்துள்ளதாகவும், கூறப்படுகிறது.
 
பல்கலை கழக இரவு காவலர்கள் பாதுகாப்பை மீறி மாணவிகள் விடுதிக்குள் மர்ம நபர்  புகுந்த சம்பவத்தில் முறையாக நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக, மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.