1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2024 (17:56 IST)

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை இன்று அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
 
வெளிநாடுகளுக்கு ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் ஜாபர் சாதிக், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டதாகவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை ஹெல்த் மிக்ஸ் பவுடர் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
 
மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அவரது மனைவியும் விசாரணை வளையத்துக்குள் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று  ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

 
மேலும், ஜாபர் சாதிக்கை சென்னைக்கு கொண்டு வந்து காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.