1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:07 IST)

விருதுநகர் வேட்பாளர் ராதிகா மீது புகார்..! தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

விருதுநகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாக பாஜக வேட்பாளர் ராதிகா மீது காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று  மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. மாலை 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதோடு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.
 
இந்நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று மாலை 6 மணியுடன் தங்களது பிரச்சாரத்தை முடித்தனர். ஆனால், மாலை 6.30 மணிக்கு மேல் பாஜக வேட்பாளர் ராதிகா, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
 
மாலை 6 மணிக்கு மேல் பேட்டியளித்து தனது தேர்தல் வாக்குறுதிகளைக் கூறியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில், சுயேட்சை வேட்பாளரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான மணிகண்டன் புகார் அளித்துள்ளார்.

அதோடு, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர் இன்று புகார் அளித்தார். அதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பற்றியும் அவதூறான செய்திகளை ராதிகா தெரிவித்ததாகவும், வாக்காளர்களிடையே பொய் செய்தியை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் எங்களது வேட்பாளருக்கு வாக்கு கிடைப்பதை தடுக்கும் வகையில் குற்றம் புரிந்துள்ளார் எனவும் புகாரில் கூறியுள்ளார்.

 
எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காகவும், பொய் செய்தியை பரப்பியதற்காகவும் பாஜக வேட்பாளர் ராதிகா, சரத்குமார், பாஜக மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.