சேத்துப்பட்டு தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை : முன்னாள் கார் டிரைவர் சிக்கினார்
சேத்துப்பட்டில் உள்ள தொழிலதிபர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த வீட்டில் பணி புரிந்த முன்னாள் டிரைவர், அவரது நண்பருடன் பிடிபட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசித்து வந்த தொழிலதிபர் கோவிந்தாச்சாரி தனது மனைவி மீனாவுடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவரது மகள் கிரிஜா மட்டும் சென்னையில் வேறொரு இடத்தில் வசிக்கிறார். இவர் அடிக்கடி ஹாரிங்டன் விட்டிற்கு வந்து பார்த்து விட்டு செல்வார்.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இவர் அந்த வீட்டிற்கு சென்ற போது, முதல் மாடியில் இருந்த அறையில், பீரோவில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம்-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது பற்றி அவர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் சோதனை செய்தனர். அதில் மூன்று பேர் முகமூடி அணிந்து வீட்டில் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. அதன்பின், அந்த வீட்டில் பணிபுரிந்தவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதில், அங்கு கார் டிரைவராக பணிபுரிந்து வேலையில் இருந்து நின்றுவிட்ட சிவராஜ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, போலீசார் சிவராஜை வலை வீசி தேடி வந்தனர். இதில், அவர் அந்தியூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் நண்பர் ஏகாம்பரம் என்பவரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், கொள்ளையடித்த நகைகளை ஏகாம்பரத்திற்கு சொந்தமான ஒரு வேனில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ததோடு, நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.