செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னை விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில்: பாமக முக்கிய கோரிக்கை

ramadoss
சென்னை விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் குறித்து பாமக நிறுவனர் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
சென்னை விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!
 
விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஒப்புக்கொண்டார். அதன்பின் 6 மாதங்களாகும் நிலையில், இன்னும்  மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்காததை நியாயப்படுத்த முடியாது!
 
கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டது. சென்னையையும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைக்க இப்போதுள்ள புறநகர் ரயில், நகரப் பேருந்து சேவைகள்  போதுமானவையல்ல. அதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள்!
 
தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் தான் மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்று நிதியை பெற முடியும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; நடப்பாண்டிற்குள் பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!