வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (15:25 IST)

துணைவேந்தர்கள் இல்லாத முப்பெரும் பல்கலைக்கழகங்கள் : ராமதாஸ் கோபம்

தமிழகத்தின் மூன்று பெரிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளும் காலியாக கிடப்பது பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் பெருமைப்படும் வேளையில், தமிழகத்தில் உயர்கல்வி முற்றிலுமாக முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூன்று பெரிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளும் காலியாக கிடப்பதுதான் இதற்குக் காரணம் ஆகும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
 
ஒரு மாநிலம் அறிவுசார் பிராந்தியமாகவும், ஆராய்ச்சியில் சிறந்ததாகவும் மாற வேண்டுமானால், அந்த மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் திறமையான கல்வியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் கல்வியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாமல், அப்பதவியை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு காசு பலம் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் தங்களின் விரல் அசைவுக்கு வளைந்து ஆடுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். இத்தகைய ஆட்களுக்காக ஆட்சியாளர்கள் காத்திருப்பது தான் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பதற்கு காரணமாகும்.
 
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாண்டவன் கடந்த ஜனவரி 10-ஆம் தேதியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் கடந்த 09.04.2015 தேதியும் ஓய்வு பெற்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இராஜாராமின் பணிக் காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இந்த மூன்று பல்கலைக்கழகங்கள் தான் தமிழகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் ஆகும். இவற்றில் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மட்டும் 129 கல்லூரிகளும், 52 ஆராய்ச்சி நிறுவனங்களும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளுகையில் 550 கல்லூரிகளும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் 82 கல்லூரிகள் மற்றும் 18 ஆராய்ச்சி நிறுவனங்களும் உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் உள்ள சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 6 மாதங்களாக காலியாக உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 15 மாதங்களாக நிரப்பப்படவில்லை. இந்திய வரலாற்றில் எந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியும் இவ்வளவு அதிக காலம் காலியாக கிடந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 
சென்னை பல்கலை. துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் அதன் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி விட்டன. ஆராய்ச்சிப் பணிகளுக்காக பல்கலைக்கழக மானியக்குழு ஒதுக்கிய ரூ.8 கோடி நிதி செலவிடப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாததால் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சிப்படிப்பு வரை முடித்த அனைவரும் பட்டங்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். பலருக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை கிடைத்தாலும், இன்னும் பட்டம் கிடைக்காததால் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய பேராசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்படாததால் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது.
 
காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 15 மாதங்களும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 7 மாதங்களும் ஆகிவிட்ட போதிலும் இதுவரை முன்னேற்றம் இல்லை. இரு பல்கலை.களுக்கும் ஏற்கனவே துணைவேந்தர்களாக இருந்து பல்வேறு குற்றச்சாற்றுக்கு உள்ளானவர்களை நியமிக்க ஆட்சியாளர்கள் விரும்புவதாகவும், அதனால் தான் இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்கள் தாமதமாவதாகவும் புகார் எழுந்துள்ளன. இந்த புகார்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தமிழக அரசோ மவுனம் கடைபிடிக்கிறது.
 
துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது ஒருபுறமிருக்க தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதவியும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காலியாக கிடக்கிறது. உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த அபூர்வா, கடந்த மாதம் 16 ஆம் தேதி மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். அதன்பின்னர் உயர்கல்வித்துறைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்படவில்லை. மாறாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் இப்பதவியை கூடுதல் பணியாக கவனித்து வருகிறார். இதனால் உயர்கல்வித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 3 ஆண்டுகளுக்கு முன் 17.08.2013 அன்று சென்னைப் பல்கலைக்கழக 155-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசும்போது,‘‘பல்கலைக்கழக கல்வியின் உலக மையமாக தமிழகத்தை உருவாக்க பாடுபட்டுவருகிறேன்’’ என்று கூறினார். உயர்கல்வித்துறை செயலாளர் பதவியையும், 3 பெரிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளையும் காலியாக வைத்திருப்பது தான் தமிழகத்தை உயர்கல்வியின் உலக மையமாக மாற்றும் லட்சனமா? என்பதை ஜெயலலிதா தான் விளக்க வேண்டும். இந்த விஷயத்தில் இனியும் தூங்கி வழியாமல் உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை தகுதியும், திறமையும் கொண்டவர்களைக் கொண்டு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன்.