வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (23:20 IST)

ஆதிக்கவாதிகளே இறுதியில் ஏமாறுவார்கள்- உதயநிதி டுவீட்

புதிய கல்விக் கொள்கை அந்தந்த மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீரி, மலையாளம்,கன்னடம், குஜராத்தி, அசாமி, பெங்காலி, கொங்கணி,மணிப்புரி, பஞ்சாபி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு வேண்டுமென்றே தமிழைப் புறக்கணித்துள்ளதோ எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புதிய கல்விக்கொள்கையை 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள ஒன்றிய அரசு, தமிழை மட்டும் திட்டமிட்டு புறக்கணித்துள்ளது. இந்தி-சமஸ்கிருத திணிப்பு, 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு, கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு என்ற சூழ்ச்சிகளும் - பிற்போக்குத்தனங்களுமே புதிய கல்வி கொள்கையாக வருகிறது. இதனால்தான் தி.மு.க உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களும், அறிவுசார் பெருமக்களும் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்தனர், எதிர்க்கின்றனர். புதிய கல்வி கொள்கையை தமிழில் வெளியிடாமல் மக்களை ஏமாற்றி, இதை கொல்லைப்புறம் வழியாக செயல்படுத்த நினைத்தால் ஆதிக்கவாதிகளே இறுதியில் ஏமாறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.