திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (16:09 IST)

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திடீர் ஒத்திவைப்பு..

நாளை நடைபெறுவதாக இருந்த அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை அரசு  நிறைவேற்றதால் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தை அறிவித்தனர்.  இதன்படி ‘டிசம்பர்  4-ம் தேதி புறநோயாளிகளுக்கான சிகிச்சை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் நோயாளிகள் முறையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் அவதியுற்றனர்.

இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா என்பவர் கடந்த 3 நாட்களாக நடைபெறும் அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இதனை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் மருத்துவர்களின் போராட்டத்தை நிறுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த நீதிபதிகள் மருத்துவக்குழுவுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இன்று மீண்டும் விசாரனைக்கு வந்த இந்த வழக்கில் மருத்துவர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் ‘பல கட்டங்களாக எங்கள் கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகிறோம். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைத்து விசாரனை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.’

அரசு தரப்பில் ஒரு நபர் வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கைக் கிடைத்தவுடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதற்கிடையில் நீதிமன்றக் கோரிக்கைகளை ஏற்று மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக உறுதி அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,மருத்துவர்களின் கோரிக்கைகளை தீர்க்க அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதையும் ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை எப்போது கிடைக்கும், ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் எனப் பலக் கேள்விகளை எழுப்பி உள்ளது.

இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு சுகாதாரத்துறையை வலியுறுத்தியுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.