1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 மே 2023 (12:55 IST)

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து வெற்றி பெற்ற இரு பெண் தேவதைகள்: ராமதாஸ் வாழ்த்து..!

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற இரு பெண் தேவதைகள் என குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய அனைத்திந்திய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதிய 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும்  வாழ்த்துகள்.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூரைச் சேர்ந்த சுஷ்மிதா இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தேசிய அளவில் 528-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுஷ்மிதாவின் சகோதரி ஐஸ்வர்யா கடந்த 2020-ஆம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில்  தேசிய அளவில் 47-ஆம் இடமும், தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடமும் பெற்றார். மிக மிக பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமுதாயத்திலிருந்து தமிழ்நாடு பிரிவில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஐஸ்வர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐஸ்வர்யா  குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற போது அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதற்கு நன்றி தெரிவித்த அவர், ‘ அய்யா... நான் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றதற்கு நீங்கள் போராடிப் பெற்றுத் தந்த  20%  எம்.பி.சி இட ஒதுக்கீடு தான் காரணம்” என்று கூறினார்.  எப்படி? என்று கேட்ட போது,’’ அய்யா... நீங்கள் பெற்றுத் தந்த 20%  எம்.பி.சி இட ஒதுக்கீட்டினால் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர முடிந்தது. அந்தத் தகுதியை வைத்து தான்  குடிமைப் பணி தேர்வை எழுதினேன்” என்று கூறினார்.
 
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரு பெண் தேவதைகள் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியும்,  பெருமையும் அளிக்கும் செய்தியாகும்.
 
Edited by Mahendran