ஜெயலலிதா உயிரோடு இருந்ததை பார்த்தேன் - மருத்துவர் பாலாஜி வாக்குமூலம்
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா உயிரோடு இருந்ததை பார்த்தேன் என மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது. விசாரணையை தொடங்கியுள்ள ஆறுமுகச்சாமி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க 60க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இதில், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, அவரின் சகோதரர் தீபக் ஆகியோரும் அடக்கம்.
இந்நிலையில், ஜெ. மருத்துவமனையில் இருந்த போது தேர்தல் ஆவணங்களில் அவரின் கைரேகையை பதிவு செய்த மருத்துவர் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதையடுத்து, அவர் நேற்று காலை விஷாரணை ஆணையத்தில் ஆஜரானர். அப்போது, அவரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரண நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் அவர் கூறியதாவது:
ஜெ.விற்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் மற்றும் வேலூர், ஹைதராபாத், பெங்களூர் போன்ற இடங்களிலிருந்து வந்த சிறப்பு மருத்துவர் சிகிச்சை அளித்தனர். அவர்களை அழைத்து செல்லும் போது அறையில் ஜெயலலிதாவை பார்த்தேன்.
சிகிச்சையின் போது ஜெ.வுடன் சசிகலா மட்டுமே இருந்தார். அவர் மட்டுமே ஜெ.வுடன் பேசி வந்தார். அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவர் குழுவில் நான் உட்பட 5 மருத்துவர்கள் இருந்தனர். எங்களுக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சி கூட இல்லை.
பல நேரங்களில் ஜெயலலிதா நீர் ஆகாரத்தையே உணவாக எடுத்துக்கொண்டார். ஜெ. மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு ஒரு வாரம் முன்பே உடல் நிலை சரியில்லாமல்தான் இருந்தார். போயஸ்கார்டனில் அவருக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் குறித்து அவரின் குடும்ப மருத்துவரிடம்தான் கேட்க வேண்டும். கடந்த டிசம்பர் 2ம் தேதி வரை அவர் உயிரோடு இருந்ததை நான் பார்த்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.