வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (16:51 IST)

சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் வேடிக்கை பார்ப்பதா..? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

Anbumani Fisherman
தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  சிங்களப் படையினரின்  அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்  கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம்  பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது என்றும் அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  
தங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அண்மையில் தான் தமிழக மீனவர்கள் 4 பேருக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறைதண்டனை அளித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர்களின் தண்டனையை  ரத்து செய்யாத  சிங்கள அரசு, இலங்கை சிறைகளில் சில வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களை விடுதலை செய்தது என்றும் அவர்கள் விமானம் மூலம்  சென்னை வந்ததற்கு அடுத்த நாளே  22 மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக் கொள்ள  முடியாது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர்,  இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது  தொடர்ந்து அத்துமீறல்களை கட்டவிழ்த்து விடுகிறது என்றும் அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். 
 
இது  இந்தியாவின் இறையாண்மைக்கு  விடப்படும் சவால் ஆகும் என்றும் இலங்கையின் இந்த சீண்டல்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்,
 
40 ஆண்டுகளாகத் தொடரும் சிங்களைக் கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவும்,  மீனவர்கள் சிக்கலுக்கு  நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
இப்போது கைது செய்யப்பட்ட  22 மீனவர்களையும்,  இலங்கை அரசால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.