வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 31 ஜூலை 2018 (16:55 IST)

கருணாநிதியின் உடல்நிலை : அதிர்ச்சியில் மரணமடையும் திமுகவினர்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் மரணமடையும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக உடல் நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கையசைவை காண பல தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் அவரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.  
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சியை சேர்ந்த ரா.அம்சகுமார்(62), கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு என்ற செய்தியை தொலைக்காட்சி செய்தியில் கேட்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். 
 
அதேபோல், கந்தர்வகோட்டை கல்லுக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக விசுவாசி நாதஸ்வர கலைஞர் கணேசேன்(80), கலைஞர் உடல் நிலைக்குறித்த வதந்தியால் ஏற்பட அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார். 
 
மேலும், திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சேர்ந்த திமுக தொண்டர் கங்கன்(60) கருணாநிதி உடல் நிலை குறித்த செய்தியை கேட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 
இந்நிலையில், கொடைக்கானலில் திமுக-வைச் சேர்ந்த மஜித் மாரடைப்பால் மரணமடைந்தார். கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக செய்தி வெளியான போது ஏற்பட்ட மாரடைப்பில் அவர் உயிர் பிரிந்தது.
 
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடராஜா நகர் பகுதியில் வசிக்கும் சேகர்மணி (உதயசூரியன் நாடகமன்றம்) என்பவர் கலைஞரின்  உடல்நிலை குறித்த தகவலின் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
 
மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குன்றியது குறித்து செய்தி கேட்ட கோவில்பட்டி, எட்டையபுரம் 13வது வார்டு உறுப்பினர் செல்வகுமார் என்பவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
 
கருணாநிதியின் உடல் நிலை காரணமாக இதுவரை 6 திமுக தொண்டர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்த செய்தி திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.