வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (12:42 IST)

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி.! டெபாசிட் வாங்குமா நாம் தமிழர் கட்சி.?

Anniyur Siva
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
 
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
 
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். 
 
வாக்கு எண்ணிக்கை:
 
ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
திமுக வேட்பாளர் முன்னிலை:
 
ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்று வருகிறார். தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளரும், மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் உள்ளனர்..
 
திமுகவினர் கொண்டாட்டம்:
 
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளதால் அவர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இனிப்பு வழங்கிய முதல்வர்:
 
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின், திமுகவினருக்கு இனிப்புகளை வழங்கினார். 
 
Abinaya
டெபாசிட் பெறுமா நாம் தமிழர்?
 
இதனிடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா சொற்ப ஓட்டுகளே பெற்று வருகிறார். இதனால், அபிநயா டிபாசிட்டை தக்க வைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 
ஒரு தொகுதியில் பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகள் பெற்றால் மட்டுமே வேட்பாளர் செலுத்திய டிபாசிட் தொகை திரும்ப கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.