வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (12:57 IST)

அரசியல்வாதியாக இருப்பதால் வெட்கப்படுகிறேன் - மதுரை எம்.எல்.ஏ உருக்கம்

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் பூதாகாரமாய் வெடித்துள்ளது.
 
அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.எல்.ஏ. தியாகராஜன் “நான் என்னுடைய தொழிலை விட்டுவிட்டு 18 மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தேன். ஆனால், தற்போது தவறான முடிவு எடுத்துவிட்டேனோ என கவலைப்படுகிறேன்.  எதிர்கட்சி தரப்பில் இருந்தால் கூட அனிதாவின் ரத்தம் அரசை நடத்தும் அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது.  அந்த வகையில்,  நான் அரசியல்வாதியாக இருப்பதற்காக தற்போது வெட்கப்படுகிறேன். இரு குழந்தைகளின் தகப்பனாக, அனிதாவின் பெற்றோரின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இளைஞர்களுக்கு நம்பிக்கை தீபமாக இருந்தவரை இழந்துவிட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.