வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (08:47 IST)

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.! ஸ்டாலினை விளாசிய இபிஎஸ்..!!

edapadi
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுதினமும்  வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே சிந்தனை இருந்து கொண்டிருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
 
ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் இருக்கும் போது 12,110 கோடி அளவுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று தெரிவித்தார். 100 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு மேலாக உணவு பொருள் உற்பத்தி செய்து, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அதிமுக அரசு விருதுகள் பெற்றது என்று எடப்பாடி கூறினார். 

திமுகவின் 33 மாத கால ஆட்சியில் திட்டங்களை அறிவிக்க ஆய்வு செய்ய 52 குழுக்களை ஸ்டாலின் நியமித்திருந்தார், திட்டங்களை அறிவிக்க 52 குழுக்கள் அமைத்தீர்களே, என்ன செய்தீர்கள் என வெள்ளை அறிக்கை கேட்டும், ஆனால் கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். 

திமுக அரசு திராவிட மாநில அரசு அல்ல என்றும் 52 குழுக்கள் அமைத்திருப்பதால் அது குழு அரசாங்கம் ஆகும் என்றும் அவர் விமர்சித்தார். மேலும் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுதினமும்  வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே சிந்தனை இருந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
 
திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே உள்ளது என்றும் அதிமுகவில் தொண்டனும் தலைமை பதவிக்கு வரலாம், அதற்கு நான் உதாரணம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அவை சார்ந்த மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் தனித்தனியாக நிற்கின்றன என்றும் முரண்பட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகளை ஒன்று திரட்டி இந்திய கூட்டணி பெயரில் கூட்டணி அமைத்திருக்கின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.
 
இந்தியா கூட்டணியால் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறினார். தமிழக மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டதால் இந்தியா கூட்டணி பெயரில் வாக்குகளை பெற ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

 
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார் என்றும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு 100 மானியம் என எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்ற வில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.