சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு : ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
தமிழக சட்டசபையில் இன்று கூட்டம் தொடங்கியது. முதல் நாள் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். ஆனால் அவர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர் இதனால் அவையில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையை விட்டு தன் கட்சி உறுப்பினர்களுடன் வெளியே வந்த ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறியதாவது:
தமிழக அரசு செயலிழந்து கிடக்கிறது. தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி உதவி கோரியது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து 1500 கோடி ரூபாய் கூட முழுமையாக பெறமுடியவில்லை.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாக தமிழக அரசு கூறியது ஆனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அந்த ஆலையை திறக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆற்றில் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அம்மாநில அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்று தடுப்பணை கட்டி வருகிறது. அந்த அனுமதியை திரும்ப பெறவேண்டும் என அழுத்தம் தராத அரசாக தமிழக அரசு இருக்கிறது.
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் அளித்ததால் தமிழக சுகாதாரத்துறை தோல்வி அடைந்திருக்கிறது. இந்தக் காரணங்களால் தான் சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்ததாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை கடந்த ஆண்டு போலவே சம்பிரதாய உரையாகவே இருந்தது என அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.