எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்றாங்க!: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பழைய வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்த வாக்குவாதத்தில் சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இன்று எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பின. அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பழைய வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டம் அனுமதி பெறாமல் நடந்ததாகவும், இதுகுறித்து ஜமாத் தலைவர்களை காவல்துறைக்கு அழைத்து பேசியதாகவும், இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாததாலும், போலீஸார் மீது கற்களை எறிந்து தாக்கியதாலும் போலீஸார் போராட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் முதல்வரின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. மேலும் இதுகுறித்து பேசியுள்ள மு.க.ஸ்டாலின் குடியுரிமை சட்ட திருத்தத்தின் மீது விவாதம் நடத்த கடந்த சட்டமன்ற கூட்டத்திலேயே அனுமதி கோரப்பட்டது. அது ஆய்வில் இருப்பதாக கூறிய சபாநாயகர் தற்போதைய சட்டமன்ற கூட்டத்திலும் அதுகுறித்து பேச அனுமதி அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.