கவுன்சிலர் கடத்தல்; திமுகவினர் மீது பெட்ரோல் வீச்சு! – அதிமுகவினர் கைது!
ராமநாதபுரத்தில் ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியதாக திமுகவினர் மீது அதிமுகவினர் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து மறைமுக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கவுன்சிலர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தமிழகமெங்கும் தொடர்ந்து வருகின்றன. ராமநாதபுரம் அருகே கமுதியில் மறைமுக தேர்தலுக்காக தேமுதிக கவுன்சிலரை திமுகவினர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்பதற்காக புதுக்குறிச்சி சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் காளிமுத்து தரப்பினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிமுகவினர் திமுக கட்சியினர் மீது பெட்ரோல் குண்டுகலை வீசி தாக்குதல் நடத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதலில் அரிவாளால் வெட்டப்பட்டதில் திமுகவை சேர்ந்த போஸ் மற்றும் விஜய் படுகாயமடைந்தார்கள். போலீஸில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து காளிமுத்து உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கமுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.