திமுக அராஜகம் செய்யும் ரவுடி கட்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திமுக அராஜகம் செய்யும் ரவுடி கட்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கடும் தாக்கு.
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் எ தானேஷ் மற்றும் குளித்தலை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோரை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக.,வில் உண்மைக்கு, உழைப்புக்கு, தியாகத்துக்கு இடமில்லை. திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. அங்கு செந்தில்பாலாஜி போன்று யார் வேண்டுமானாலும் சேர் போடலாம். அதிமுக.,வில் இருந்து யார் போனாலும், மாவட்ட செயலர், மாநில பொறுப்பு, வேட்பாளர் என கொடுக்கின்றனர். ஆனால், அதிமுக.,வில் அப்படியல்ல, இந்த ஜனநாயக இயக்கத்தில் விஸ்வாசமுள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்றார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஆகிவிடுவேன் என கனவு மட்டும்தான் காண முடியும். செந்தில் பாலாஜி எத்தனையோ வேஷம் போடுவார், அவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். அவர் 5 கட்சியில் மாறியுள்ளார்; போலியான அவரை நம்பிவிடாதீர்கள். செந்தில் பாலாஜி ஊழல் செய்ததாக கரூரில் ஸ்டாலினே பேசியுள்ளார். இப்போது அவரே செந்தில் பாலாஜிக்கு ஓட்டு கேட்கிறார். 2006 - 2011 வரையில் தமிழகம் முழுவதும் மின்வெட்டு இருந்தது. இதனால் பலர் வேலையிழந்தனர். அப்போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக மாற்றினார். திமுக அராஜகம் செய்யும் ரவுடி கட்சி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி. ஸ்டாலினின் மகன் உதயநிதி, டிஜிபி.,யையே மிரட்டியுள்ளார். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால், மக்கள் படாதபாடு படுவர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக திமுக விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி மற்றும் ரஜினி மக்கள் மன்றம் கட்சியின் தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினருமான பகவான் பரமேஸ்வரன் தலைமையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சியில் இணைந்தனர்.