வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (12:30 IST)

தங்க தமிழ்செல்வனை இயக்குபவர் இவரா? - தினகரன் அதிர்ச்சி

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வனை சசிகலாவின் சகோதரர் திவாகரன் இயக்குகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - ஓபிஎஸ் அணிக்கு எதிராக தினகரன் செயல்பட துவங்கிய போது அவர் பக்கம் சென்ற 18 எம்.எல்.ஏக்களில் முக்கியமானவர் தங்க தமிழ்ச்செல்வன். இவரும், வெற்றிவேலும்தான் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்றனர்.
 
இந்நிலையில், தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கியதால், தற்போது இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு சென்றுள்ளது. தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருந்த தினகரன் தரப்பு இந்த தீர்ப்பில் கடும் அதிர்ச்சியைடந்துள்ளது. இதில், சபாநாயகருக்கு எதிரான தனது மனுவை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்கப் போகிறேன் எனவும், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இது தொடர்பாக தனது தொகுதியான ஆண்டிப்படிக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்டுவிட்டார்.

 
ஆனால், அவரின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிவதாக தினகரன் உணர தொடங்கியிருக்கிறாராம். குறிப்பாக அவரின் செயல்பாடுகளுக்கு பின்னால் திவாகரன் இருப்பதாக அவர் சந்தேகிக்கிறாராம். அதற்கு காரணம் இருக்கிறது. சமீபத்தில் தங்கதமிழ்ச்செல்வனை திவாகரன் தரப்பிலிருந்து சிலர் சந்தித்து பேசியிருக்கிறார்கள். ராஜினா செய்வதுதான் சரியான வழி. உங்கள் அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுக்க முதல்வர் பழனிச்சாமி தயாராக இருக்கிறார். எனவே, மற்ற 17 எம்.எல்.ஏக்களிடமும் பேசுங்கள். தினகரன் பக்கம் இருப்பதால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை. உங்களை அவர் பயன்படுத்தி பலன் பெற்றுக்கொண்டிருக்கிறார் எனப் பேசினார்களாம்.
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தங்க தமிழ்ச்செல்வன் உட்பட மற்ற எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வந்தால் மகிழ்ச்சிதான் என நேரிடையாகவே அழைப்பு விடுத்தார்.  இதற்கு பின்புலத்திலும் திவாகரன் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
 
அதாவது எடப்பாடிக்கு ஆதரவாகவும், தினகரனுக்கு எதிராகவும் பேசி வந்த திவாகரன், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் தற்போது எடப்பாடியுடன் கை கோர்த்து தினகரனின் கூடாரத்தை காலி செய்யும் முயற்சியில் திவாகரன் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.