1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2024 (16:39 IST)

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

ayodya crowd
திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது  பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டதாக அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் வேதனை தெரிவித்தார்.
 
கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி லட்டுவில்  விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். 

அதற்கு மறுப்பு தெரிவித்த ஜகன்மோகன் ரெட்டி,  லட்டு விவகாரத்தில் பொய்யான தகவலை தெரிவித்து ஆந்திராவில் நிலவும் சட்டம் ஒழுங்கை திசை திருப்ப பார்க்கிறார் சந்திரபாபு நாயுடு என்று குற்றம் சாட்டினார்.

மேலும் இது குறித்து விசாரிக்க கோரி ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி, நடந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் திருப்பதி லட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.

எத்தனை லட்டு வந்தது என்பது குறித்து அறக்கட்டளைக்கு தான் தெரியும் என்றும்  ஆனால், வந்தவை அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்றும் அவர் கூறினார்.  இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒரு லட்சம் லட்டு பிரசாதங்களை அயோத்திக்கு திருப்பதி தேவஸ்தானம் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.