செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (19:26 IST)

திண்டுக்கல் ஐ லியோனிக்கு முக்கிய பதவி: முதல்வர் உத்தரவு

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
 
தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்விமியல்‌ பணிகள்‌ கழகம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள பள்ளிகளுக்குப்‌ பாடப்‌ புத்தகங்களைத்‌ தயாரித்து, அச்சிட்டு விநியோகம்‌ செய்வதற்காகத்‌ தமிழக அரசால்‌ ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம்‌ ஆகும்‌. இக்கழகம்‌ மூலம்‌ அச்சிடப்படும்‌ பாடநூல்கள்‌, அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளுக்கு இலவசமாகவும்‌, தனியார்‌ பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும்‌ கட்டணத்திலும்‌ வழங்கப்படுகின்றன.
 
ஒன்றாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு வரை தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில வழிப்‌ பாடநூல்கள்‌, சிறுபான்மை மொழிப்‌ பாடநூல்கள்‌, மேல்நிலைப்‌ பள்ளிக்கான தொழிற்கல்விப்‌ பாடப்புத்தகங்கள்‌, ஆசிரியர்‌ பட்டயப்‌ பயிற்சிக்கான பாடப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ பல்நுட்பக்‌ கல்லூரிக்கான பாடப்‌ புத்தகங்கள்‌ ஆகியவற்றைத்‌ தயாரிக்கும்‌ பணியை இக்கழகம்‌ திறம்பட மேற்கொண்டு வருகின்றது.
 
1960 மற்றும்‌ 1970ஆம்‌ ஆண்டுகளில்‌ வெளிவந்த பாடநூல்களை மீட்டுருவாக்கம்‌ செய்து, இணையத்தில்‌ கொண்டுவரும்‌ ஜந்தாண்டுத்‌ திட்டத்தை 2017லிருந்து இந்நிறுவனம்‌ செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனம்‌ பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும்‌ பணிகளை மேற்கொள்வதோடு, மொழிபெயர்ப்புப்‌ பணிகளையும்‌ மேற்கொண்டு வருகிறது.
 
தமிழ்நாடு பாடநூல்‌ நிறுவனம்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகம்‌ தனது பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள, இந்நிறுவனத்தின்‌ புதிய தலைவராக திரு. திண்டுக்கல்‌ ஐ. லியோனி அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு, மு.க, ஸ்டாலின்‌ அவர்கள்‌ நியமனம்‌ செய்து ஆணையிட்டுள்ளார்கள்‌.
 
திண்டுக்கல்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த திரு. திண்டுக்கல்‌ ஐ. லியோனி அவர்கள்‌, சிறந்த ஆசிரியர்‌, மேடைப்‌ பேச்சாளர்‌, இலக்கியச்‌ சொற்பொழிவாளர்‌, நகைச்சுவைப்‌ பட்டிமன்ற நடுவர்‌ ஆவார்‌. இவருக்கு 2010 ஆம்‌ ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழக அரசால்‌ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது