செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (09:32 IST)

தங்க புதையல் இருக்கு..! தொழிலதிபரை ஏமாற்றி மஞ்ச குளித்த ஜோசியர் கைது!

திண்டுக்கல்லில் தொழிலதிபர் ஒருவருக்கு தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி பல லட்சத்தை சுருட்டிய ஜோதிடரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகெ உள்ள கிராமப்பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தங்கவேல். கடந்த சில மாதங்களாக தொழிலில் பிரச்சினைகளை சந்தித்து வந்த தங்கவேல் நண்பர் பரிந்துரையின் பேரில் கணியூர் கிராமத்தை சேர்ந்த ஜோசியர் சசிக்குமாரை சந்தித்துள்ளார்.

அந்த ஜோசியர் தான் தங்க புதையலை கண்டுபிடிப்பதில் நிபுணர் எனவும், கோவையில் பெண் ஒருவர் வீட்டில் தங்க புதையல் இருப்பதாகவும் அதை கண்டெடுத்து தங்கவேல் வீட்டில் வைத்து பூஜை செய்தால் மேலும் தங்க புதையல் நிறைய கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். அதை நம்பிய தங்கவேலிடம் கொஞ்சம் கொஞ்சமாக பல லட்சம் ரூபாய், கார் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார் ஜோசியர் சசிக்குமார்.

ஆனால் தங்க புதையலை மட்டும் கண்டுபிடித்து தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் காரில் சென்ற சசிக்குமார், தங்கவேலிடம் போனில் பேசிவிட்டு கட் செய்யாமலே, அவரை ஏமாற்றுவது குறித்து டிரைவருடன் பேசிக் கொண்டு வந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தங்க வேல் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதை தொடர்ந்து சசிக்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த தங்கவேலின் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.