கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்த தினகரன், கிருஷ்ணப்ரியா : இப்படியெல்லாம் நடக்குமா?
2ஜி வழக்கின் தீர்ப்பை அடுத்து கனிமொழி, ராசாவிற்கு டிடிவி தினகரன் மற்றும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என தீர்ப்பு வெளியாகியுள்ளது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறிய நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இந்த தீர்ப்பை வரவேற்று மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அதேபோல், திமுகவினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல், திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் பிரமுகர்களும் இந்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்தனர்.
இதில், யாரும் எதிர்பாராத வண்ணம் டிடிவி தினகரன் இந்த தீர்ப்பை வரவேற்று பேசியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்கிற முறையில் கனிமொழி மற்றும் ராசா ஆகியோர் விடுதலை ஆனது மகிழ்ச்சி. அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என நான் விரும்பவில்லை. அதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தனது முகநூல் பக்கத்தில் “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, திருமதி கனிமொழி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் எங்கள் நிரந்தர எதிரி எனக்கூறிவந்த சசிகலாவின் குடும்பத்தில் இருவர், 2ஜி தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.