எச்.ராஜா என்ன டிசைன்னே தெரியலையே: தமிழிசையுடன் கருத்து வேறுபாடு?
பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. இவர் எப்போது எப்படி இருப்பார் என்பது தெரியாது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும், தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ என தோன்றுகிறது.
ரஜினியின் அரசியல் குறித்து இருவரும் மாறுபட்ட கருத்துக்களுடன் செயல்படுகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி பாஜகவும், ரஜினிகாந்தும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என கூறினார்.
இதனையடுத்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் குருமூர்த்தி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழிசை, ரஜினியின் கொள்கை, பாஜகவின் கொள்கையோடு ஒத்துப்போகிறது. கொள்கை ஒன்றுபட்டாலும், அரசியலில் இணைந்து செயல்படுவது வேறு என தெரிவித்தார்.
ஒருபக்கம் ரஜினியை தமிழிசை வரவேற்று பேசிக்கொண்டிருக்க, ரஜினியை கிண்டலடித்து, அவரது ஆன்மீக அரசியலை நகைப்புக்கு உள்ளாக்கும் டுவிட்டர் பதிவு ஒன்றுக்கு வரவேற்பு தெரிவித்து அருமையான பதிவு நண்பரே என எச்.ராஜா ரஜினிக்கு எதிராக செயல்படுகிறார்.
குருமூர்த்தியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் ரஜினியை வரவேற்று, பாஜக கொள்கையும், ரஜினியின் கொள்கையும் ஒன்று தான் என கூறும்போது, எச்.ராஜா ரஜினியை எதிர்க்கும், அவரை கிண்டலடிக்கும் பதிவுக்கு வரவேற்பு தெரிவிப்பது சொந்த கட்சிக்குள் இருவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாட்டை காட்டுகிறது.