வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (08:28 IST)

நோயாளி இறந்தால் டாக்டரை கைது செய்யக்கூடாது? – டிஜிபி வெளியிட்ட புது உத்தரவு!

Sylendra Babu
தமிழ்நாடு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படும்போது இறந்தால் அது மருத்துவரின் கவனக்குறைவே என மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்துள்ளார்.



இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழக டிஜிபி அலுவலகம். அதில் நோயாளிகள் இறக்க மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் காவல்துறையினர் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவையாவன;

1 முழுமையான விசாரணை நடத்தி அனைத்து விதமான வாய்மொழி மற்றும்‌ ஆவண ஆதாரங்களை திரட்ட வேண்டும்‌.

2. மூத்த அரசு மருத்துவரிடம்‌ குறிப்பாக, அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவரிடமிருந்து வல்லுநர்‌ கருத்து பெற வேண்டும்‌. 

3. இந்திய தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவு 304 (A) -ன்‌ கீழ்‌ குற்ற செயல்‌ உறுதி செய்யப்பட்டால்‌, மேல்‌ நடவடிக்கைக்கு முன்‌ கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்‌ அடிப்படையில்‌ சட்ட ஆலோசனை பெற வேண்டும்‌. 

4. சிகிச்சையின்‌ போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின்‌ மீது குற்றம்‌ சாட்டப்பட்டால்‌ மற்ற வழக்குகளைப்‌ போல்‌ கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம்‌ இல்லை. 

5. வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில்‌ தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும்‌ சம்பந்தப்பட்ட மாநகர காவல்‌ ஆணையாளர்கள்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்கள்‌ நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்‌. 

6. வழக்கின்‌ விவரங்கள்‌, ஆதாரங்கள்‌, சாட்சியங்கள்‌ மற்றும்‌ குற்றம்‌ நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை காவல்துறை தலைமை இயக்குனருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி, நேரத்திற்குள்‌ அனுப்பப்பட வேண்டும்‌.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K