வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2023 (09:03 IST)

வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் வதந்தி! – 4 பேர் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை!

Sylendra Babu
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதற்காக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமீபத்தில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ வடமாநில மக்களிடையே பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கொல்லப்பட்டவர்கள் பீகாரிகள் என தகவல் பரவிய நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால் அப்படியான எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்றும், விஷமிகள் சிலர் பழைய வீடியோக்கள் சிலவற்றை எடிட் செய்து பொது அமைதியை குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதாகவும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்தது.

எனினும் இதுதொடர்பாக கள நிலவரத்தை அறிய ஜார்கண்ட், பீகார் மாநில அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழு தமிழகம் விரைந்துள்ளது. இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தனிப்படை அமைத்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்றும், அவர்கள் எவ்வித அச்சமும் இன்றி அமைதியாக வசித்து வரும் நிலையில் போலி வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வதந்தி விவகாரத்தில் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Edit by Prasanth.K