சென்னையில் இருந்து 310 கிமீ தொலைவில்... நாளை அதிகாலை கரை கடக்க வாய்ப்பு!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 310 கிமீ தென் கிழக்கு திசையில் நீடிக்கிறது. இது வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே நாளை அதிகாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் இன்று அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.