1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (09:59 IST)

திங்கள் முதல் பணிக்கு திரும்ப வேண்டும்: ஊழியர்களுக்கு தொடக்க கல்வித்துறை உத்தரவு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு தற்போது மூன்றாம் கட்டமாக அமலில் உள்ளது என்பதும் இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மே 17ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தியதை அடுத்து சில கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை அடுத்து கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் பத்தாம் வகுப்புக்கு ஜூன் 1ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரும் திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்ப வேண்டுமென்று தொடக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து பள்ளிகள் திறக்கும் பணிகள் குறித்த ஆலோசனையை நடைபெறும் என்றும் விரைவில் பள்ளி திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது