திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (12:06 IST)

டெங்கு கொசு உற்பத்தியாக பிளாஸ்டிக் பொருட்களே காரணம் - ஆய்வில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் டெங்கு பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் உற்பத்திக்கு பிளாஸ்டிக் பொருட்களே முக்கிய காரணம் என சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


 

 
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக உள்ளது. தினந்தோறும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலில் ஏராளமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
எனவே, டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்களும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். 


 

 
இந்நிலையில், டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி குறித்து சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது. அப்போது, கொசுக்களின் உற்பத்திக்கு 80 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களே காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைவாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் டெங்கு தாக்கம் குறைவாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 
 
மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்ட பொருட்களிலிருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீடுகள், அரசு கட்டிடங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்கக்கூடிய வகையில் 27 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. அவைகளில் இருந்தே 80 சதவீத கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்க அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.