1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:19 IST)

ஜெ.தீபா ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்: போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்!

ஜெ.தீபா ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்: போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்!

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளையொட்டி தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்திருந்தார்.


 
 
இந்நிலையில், எம்ஜிஆரின் 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சமாதியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் இன்று காலை முதலே கடற்கரை சாலையில் தீபா ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர்.
 
தீபா எம்.ஜி.ஆர்.சிலைக்கு மரியாதை செலுத்த வந்த போது அவரது ஆதராவாளர்கள் தீபாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். அதிமுக தலைமையை தீபா ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
 
தீபா வந்ததால் அந்த இடம் மிகுந்த கூட்ட நெரிசலாக காணப்பட்டது. போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என தீபா ஆதரவாளர்கள் கூறினர். தீபா அங்கிருந்து சென்றபின்னர் அவரது ஆதரவாளர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தீபாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
 
தீபாவுக்கு ஆபத்து இருப்பதால் தமிழக காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் ஜெயலலிதா, ஜெ.தீபா உருவப்படம் பாக்கெட் சைஸ் அட்டையை வைத்திருந்தனர். மேலும் தீபாவுக்கு ஆதரவான பேனர்களையும் வைத்திருந்தனர்.