எனக்கு சீக்கிரமா தண்டனை கொடுங்க ப்ளீஸ் - நீதிபதியிடம் கெஞ்சிய தஷ்வந்த்
சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்த், தான் செய்த குற்றங்களுக்கான தண்டனையை விரைவில் வழங்குமாறு நீதிபதியிடம் கெஞ்சிய சம்பவம் நடந்துள்ளது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தஷ்வந்த், தனது தாயை கொலை செய்து விட்டு அவரின் நகை மற்றும் வீட்டிலிருந்த நகையை எடுத்துக்கொண்டு மும்பை தப்பி சென்றார். அவரை அங்கு கையும் களவுமாக தமிழக போலீசார் பிடித்தனர்.
ஆனால், ஒரு போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு அவர் தப்பி சென்றார். அதன்பின் ஒருவழியாக அவரை பிடித்த தமிழக போலீசார் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
அவரை நீதிமன்ற வளாகத்திற்கு போலீசார் அழைத்து வந்த போது, அங்கிருந்த பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு சராமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர்களிடமிருந்து அவரை மீட்டு போலீசார் உள்ளே அழைத்து சென்றனர்.
அந்நிலையில், தஷ்வந்துக்காக ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார், திடீரென இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், தஷ்வந்த் நேரிடையாக நீதிபதியிடம் பேசினார். அப்போது, தான் செய்த குற்றங்களுக்கான தண்டனையை விரைந்து வழங்குமாறு அவர் நீதிபதியிடம் கெஞ்சினார்.