Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2016 (14:31 IST)
ரூபாய் நோட்டு விவகாரம்; நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி: 20% பேர் செய்யும் தவறுக்கு 80% மக்கள் துன்பப்படுவதா!
ரூபாய் நோட்டு விவகாரம்; நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி: 20% பேர் செய்யும் தவறுக்கு 80% மக்கள் துன்பப்படுவதா!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டை பெறுவதற்கு வங்கிகளில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த அதிரடியான அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நிலவுகிறது.
இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் காருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து பிரபல தமிழ் நடிகர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்து கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய், மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நல்ல முடிவு தான். நம் நாட்டுக்கு தேவையான, துணிச்சலான வரவேற்கத்தக்க முயற்சி தான். இது நம் நாட்டு பொருளாதாரத்தை வளர்த்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும் போது அதற்கான பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் இந்த பாதிப்புகள் நோக்கத்தைவிட அதிகமாகிவிடக்கூடாது என்பதை பார்த்துக்கனும். சில விஷயங்களை நாம் தவிர்த்திருக்கலாம். சாதாரண மக்கள் பசிக்கு சாப்பிட முடியாமல், மருந்து மாத்திரை வாங்க முடியாமல், ஏடிஎம் கார்டுக்காக வெளியூர் போய், முக்கியமா திரும்ப வீடு வந்து சேர முடியாமல், அன்றன்றைக்கு கிடைக்கும் 500, 1000-த்தை வச்சுக்கிட்டு சின்ன சின்ன தொழில் செய்யும் வியாபாரிகள் முதற்கொண்டு தியேட்டர்ஸ், மால், மார்க்கெட் இந்த மாதிரி தேவையில்லாம இவங்களெல்லாம் பாதிக்கப்படுறாங்களோ என நினைக்க தோனுது.
செய்திகளில் வரும் நிறைய விஷயங்கள் மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. திருமணம் செய்ய வைத்திருந்த பணம் செல்லாது என்னும் போது தற்கொலைக்கு செல்லும் அளவுக்கு செல்கிறார்கள். மருத்துவமனை செலவுக்கு பணம் இல்லாமல் உயிரிழக்கும் விஷயம் போன்றவற்றை தவிர்த்திருக்கலாம்னு தோனுது. நாட்டில் உள்ள 20 சதவீதம் பணக்காரர்களில் ஒரு குரூப், சின்ன சதவீதம் பேர் செய்யும் தவறுகளால மீதி இருக்குற 80 சதவீதம் மக்கள் என்ன பன்னுவாங்க.
இந்த முயற்சி இது வரைக்கும் யாரும் பன்னாத ஒரு சிறப்பான பெரிய முயற்சி, ஆனால் இப்படி ஒரு பிரச்சனைக்கு தீர்வு கானும் போது என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிஞ்சுக்கிட்டு அதற்கான முயற்சியை முன்கூட்டியே எடுத்து பன்ணியிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் என்றார் நடிகர் விஜய்.