”ரயில் கொள்ளை நடந்த இடத்தை கணிக்க முடியவில்லை” - காவல் அதிகாரிகள் திணறல்
சேலம் ரயில் கொள்ளை சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்று கணிக்க முடியவில்லை என்று ரயில்வே காவல்துறை கூடுதல் தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆரோமாசிங் தாகூர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
5-வது பெட்டியில் ரூ.10, ரூ.20 நோட்டுகள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.6 கோடி வரை இருக்கும் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே காவல்துறை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆரோமா சிங்தாகூர் (தெற்கு ரயில்வே) திருவண்ணாமலை ரயில்வே காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். ஆய்வில் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் காவல் துறையினரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், ”சேலம் - சென்னை ரயிலின் மேற்கூரையில் ஓட்டை போட்டு, ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி, காவல்துறை, ரயில்வே காவல்துறையினர் என 3 தரப்பினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இந்த ரயில் கொள்ளை சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்று கணிக்க முடியவில்லை. ரயில் நிலையங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.