மதுரையில் 40 பேருக்கு கொரோனா: வதந்தி பரப்பிய மர்ம நபர் தலைமறைவு
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளில் மிக வேகமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டும், மால்கள் திரையரங்குகள் மூடப்பட்டும் வரும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் மிகக் குறைவு என்று தான் கூற வேண்டும். இதற்கு தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் மட்டும் சுமார் 40 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக வதந்தியை மர்ம நபர் ஒருவர் பரப்பியுள்ளார். இதனை அடுத்து பொய்யான தகவலை பரப்பி பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்திய அந்த நபரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இருக்கின்றனர்
இதனை அறிந்த அந்த மர்ம நபர் தலைமறைவாக உள்ளதாகவும் அவருக்கு போலீசார் வலைவீசி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா குறித்து உறுதி செய்யப்படாத செய்திகளை சமூக வலைத்தளங்கள் அல்லது ஊடகங்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எச்சரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பற்ற முறையில் இவ்வாறு வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்