40 பேருக்கு 5 படுக்கை அறைகள் தான் ... கொரோனா தடுப்பு முகாம்களின் நிலை ? பரவலாகும் வீடியோ !
40 பேருக்கு 5 படுக்கை அறைகள் தான் ... கொரோனா தடுப்பு முகாம்களின் நிலை ? பரவலாகும் வீடியோ !
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 1,82,000 - க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. மேலும் 7,100 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், சீனாவில் 80,800-க்கும் மேற்பட்டோரும் இத்தாலியில் 27, 900-க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்படுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரை இந்தியாவில் சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து, இந்தியாவுக்கு வருபவர்கள் அந்த நாட்டின் மருத்துவர்களிடம் கொரொனா தொற்று இல்லை என்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்களை முகாமுக்கு அழைத்துச் சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
நேற்று ஸ்பெயினில் இருந்து 21 வயது மாணவர் ஒருவர் இந்தியா திரும்பியுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், டெல்லியின் துவாராகா போலிஸ் பயிற்சி பள்ளியில் உள்ள அரசு நிலையத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் 40 பேர் அந்தப் பயிற்சி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறையில் 40 பேருக்கு, வெறும் 5 படுக்கை அறைதான் உள்ளது எனவும், அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்று உள்ளதாகவும் கூறி அவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சுகாதாரமற்ற இதுபோன்ற அறைகள் இருப்பது அவர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.