ஊடகவியலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னை தியாகராஜ நகர் துரைசாமி பாலம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அவர்கள் கொரோனா தடுப்பூசிகளுக்கான ஏற்பாட்டை மிகவும் சிறப்பாக செய்துக் கொடுத்திருந்தார். இதில் செய்திவாசிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு தடுப்பூசிகளை போட்டுச் சென்றனர்.
கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டும் இங்கு போடப்பட்டது குறிப்பிடதக்கது. தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி கொரோனா தடுப்பூசி போட வந்த அனைவரும் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தங்களின் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசியை போட்டுச் சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை நேர்த்தியாகவும்,சிறப்பாகவும் தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்தினர் செய்து தங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தினர். காலை 9 மணி முதல் 2 மணி வரை இங்கு வந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது.
ஓய்வில்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வரும் நமது செய்தி வாசிப்பாளர்கள், களப் பணியில் ஈடுப்பட்டு வரும் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை இந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் சிறப்பாக ஒருங்கிணைத்து அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த கொரோனா தடுப்பூசி முகாமினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தினரை அனைவரும் சிறப்பாக பாராட்டினர்.