தொடர் மழை எதிரொலி! செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடியாக உபரி நீர் திறப்பு!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாதம் முதல் கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்றைய தினம் மீண்டும் 200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டது தற்போது நீர் வரத்து அதிகரிப்பாலும் மழையின் தாக்கம் அதிகரிப்பாலும், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பிள்ளைபாக்கம், நேமம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏரிகள் நிரம்பிய நிலையில் செம்பரம்பாக்கம் 19 கண் மதகின் 5 செட்டர்களின் வழியாக ஆயிரம் கன அடியாக உபரி நீர் அதிகரிக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி நீர்மட்ட உயரம் 22.35 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3210 மில்லியன் கன அடி, நீர் வரத்து 514 கன அடியாக உள்ளது.
உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை அனைத்தும் கதவுகளும் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம் ஆனால் கடந்த மாதம் முதல் தற்போது வரை செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில் இருந்து ஊபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது இதற்கு முக்கிய காரணம் நீர் வள ஆதாரத்துறையின் சார்பில் உபரிநீர் திறப்பதற்கு என்று ஒரு வழிமுறை இருப்பதாகவும் குறைந்த அளவு தண்ணீர் திறக்கும் போது சிறிய மதகுகளிலிருந்து திறக்க வேண்டும் எனவும் அதிக நீர் செல்லும்போது பெரிய மதகுகளில் இருந்து திறக்க வேண்டும் என்பது விதிமுறை அந்த விதிமுறை பயன்படுத்தி திறக்கப்படுவதாகவும் தற்போது குறைந்த அளவு உபரி நீர் சென்று கொண்டிருப்பதால் தேவைப்படும் போது உடனடியாக அதனை நிறுத்தி கொள்ளலாம் எனவும் அதிக அளவில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் ஐந்து கண் மதகிலிருந்து உடனடியாக திறந்து விடுவதற்காக 19 மதகில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து நீர்வரத்து மழையின் தாக்கம் அதிகரித்தால் உபரி நீர் திறப்பது அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.