விஜய் அரசியல் பேச்சு எனக்கு பிடித்திருக்கிறது: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்..!
தமிழக வெற்றி கழக மாநாட்டில் நேற்று விஜய் பேசியதை, திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில், தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக மற்றும் மத்திய ஆளுங்கட்சியான பாஜக ஆகிய இரண்டுக்கும் எதிராக விஜய் பேசியது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி விஜய்யின் பேச்சை வரவேற்று கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர், விஜய் பேச்சு குறித்து கருத்து கூறிய போது, "சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் கூட்டணி ஆட்சி ஆகிய இரண்டும் விஜய் பேச்சில் எனக்கு பிடித்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தான், விஜய்யை அரசியல் கட்சி ஆரம்பிக்க சொல்லியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி விஜய்யின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Edited by siva