திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (22:08 IST)

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தான் முதல் குற்றவாளி: கூட்டணி கட்சிக்கு வேட்டு வைத்த வைகோ

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் முதல் குற்றவாளி என்றும், பாஜக அடுத்த குற்றவாளி என்றும்  டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
காஷ்மீர் மாநிலத்தில் 370வது பிரிவை ரத்து செய்வது, இரண்டு யூனியன்களாக பிரிப்பது போன்ற நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைகோ பதிவு செய்தார். இதனையடுத்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாஜக இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன் 
 
ஷேக் அப்துல்லாவை அன்று கைது செய்து தமிழகத்தில் சிறையிலடைத்தது காங்கிரஸ். காஷ்மீரை பாதுகாக்க கார்கில் யுத்தத்தில் தமிழக இளைஞர்கள் ரத்தம் சிந்தினர். காஷ்மீருக்கான அனைத்து அதிகாரங்களையும் நீக்கிவிட்டது மத்திய அரசு என வைகோ தெரிவித்தார்.
 
மேலும் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை கூட காங்கிரஸ் பெரிதாக எதிர்க்கவில்லை என்பதும், ரத்து செய்த விதத்தைத்தான் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது