வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (11:46 IST)

முரசொலி நிலம் வழக்கு.! ஆணையம் விசாரிக்க உத்தரவு.!! உயர் நீதிமன்றம் தீர்ப்பு.!!!

highcourt
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில்  அமைந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது என்றும் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். முரசொலி நிலம் தொடர்பான வழக்கை பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.