திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2017 (10:01 IST)

செந்தில் பாலாஜி ஒரு கரும்புள்ளி: எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!

செந்தில் பாலாஜி ஒரு கரும்புள்ளி: எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவித்துவிட்டார். அவரது துரோகம் எப்போதும் மறையாது. அவரை ஒரு கரும்புள்ளி என்றே மக்கள் சொல்லுவார்கள் என கரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


 
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் முக்கியமானவர் செந்தில் பாலாஜி ஆவார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில் பாலாஜி பலமுறை அமைச்சர் பதவி பெற எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
 
இதனையடுத்து தினகரன் அணியில் ஐக்கியமான செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். இதனால் அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக பழைய வழக்குகள் தூசி தட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருமான வரித்துறையும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
 
இந்நிலையில் கரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகரும் கரூர் மாவட்ட எம்பியுமான தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரவக்குறிச்சி மறுதேர்தல் நடந்தபோது செந்தில் பாலாஜியின் வெற்றிக்காக தொடர்ந்து இருபத்தைந்து நாள்கள் தொகுதி முழுக்க ஓட்டு சேகரிக்க சென்றேன். அப்போது அங்குள்ள மக்கள் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்துகொண்டே இல்லை என்று சொல்லுவார் அமைச்சராக இருந்தபோதே யாரையும் பார்க்கமாட்டார்.
 
அவரை ஜெயிக்க வைத்தால் அதன் மோசமான பலனை பின்னால் அனுபவிப்பீர்கள் என்று சொன்னார்கள். மனிதர்கள் பிறப்பார்கள், இறப்பார்கள். ஆனால், இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை வைத்துதான் அவர்களின் இறப்பின்போது மக்கள் பேசுவார்கள். ஆனால், செந்தில்பாலாஜி அவரது வாழ்க்கை முழுவதும் முடியும் தருவாயில், மக்கள் அவரைக் கரும்புள்ளி என்றே சொல்வார்கள்.
 
செந்தில்பாலாஜி இந்த ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவித்திருக்கிறார். ஆகவே, இப்படிப்பட்டவர் சமூகத்திலே எவ்வளவு உயர்ந்தாலும், அவர் இப்பொழுது செய்கின்ற துரோகம் மறையாது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.